பு / பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்
ஒரு வரலாற்று நோக்கு
வடமேல் மாகாணத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் மகளிர் பாடசாலையாகவும் தற்போது மூன்று மும்மொழிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களை கொண்டு இயங்கும் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்யாலயம் அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை இணைப்புகளின் (Amalgamation) பிரகாரம் போல்ஸ் வீதி அரசினர் ஆண்கள் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், அரசினர் பெண்கள் பாடசாலையாக 1962.02.01 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை அதே இடத்தில் இயங்கி வருகின்றது.
அதற்கு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே புத்தளத்தில் முஸ்லிம் பெண்களுக்கென செட்டித் தெருவிலுள்ள (பைத்துல் முகந்தஸ் வீதி) தண்ணீர் தாங்கிக்கு அருகிலுள்ள காணியில் தனியானதொரு பாடசாலையாக இயங்கி வந்தது. அது மன்னர் வீதிக்கு மாற்றப்பட்ட போது அப்பாடசாலையின் உதவித் தலைமை ஆசிரியராகக் கடமை ஆற்றிய திருமதி சித்தி ஜெசிமா அகமடொன் அவர்களே புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக கடமைஎற்றார்.
1962 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள், அரசாங்கப் பாடசாலைகளுடன் ஒன்றிணைக்கப்பட்ட போது நகரில் இருந்த வேறு பாடசாலைகளில் கற்ற மாணவிகளையும் இணைத்தே பாத்திமா உருவாக்கப்பட்டது. இதன்படி அரசின் பெண்கள் பாடசாலையில் 312 மாணவிகளுடன் சாஹிரா கல்லூரி 172 மாணவிகள், சென்ஸ் ஏன்ஸ் பெண்கள் பாடசாலை 70 மாணவிகள், சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் 48 மாணவிகள், பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் 38 மாணவிகள், உட்பட மொத்தம் 640 மாணவிகளுடன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. தேர்வு இடாப்பில் முதல் நாள் பதிவில் 639 மாணவிகள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 01ம் இலக்க மாணவியாக செட்டித் தெருவை சேர்ந்த ஆ.ர். சாபார் ( இலிதர் ) என்பரது மகள் உம்முல் ஹையர் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
அரசினர் பெண்கள் பாடசாலையில் கடமையாற்றிய 16 ஆசிரியர்களுடன் ஸாஹிராக் கல்லூரியில் இருந்து 3 பேரும், சென்ஏன்ஸ் ஆங்கிலப் பாடசாலையில் இருந்து ஒருவரும் இக் கல்லூரிக்கு இடமாற்றப்பட்டனர். 1962 இல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போதே பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் என பெயரிடப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள் "பாத்திமா" அவர்களின் பெயரே இப்பாடசாலை உருவாக்கக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான புத்தளத்தின் முன்னால் பாராளுமன்ற பிரதிநிதியும் நிதி திட்டமிடல் அமைச்சருமான அல்ஹாஜ் எம். எச். எம் நெய்னா மரிக்கார் அவர்களே சூட்டினர்.
ஆரம்ப காலக் கல்வி வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1962 ல் முதன் முறையாக சென்ட் ஏன்ஸ் பாடசாலையிலிருந்து வந்த மாணவிகளில் S.S.C (தற்போதைய சா/த) தோற்றிய நால்வரில் மூவர் சித்தியடைந்தது H.S.C (தற்போதைய உ /த) வகுப்புக்கு அனுமதி பெற்றனர். இப்பாடசாலையில் தகைமை சார் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் இவர்கள் மூவரும் பிற பாடசாலைக்குச் சென்று கல்வியை தொடர்ந்து வந்தனர். 1964 களில் 23 மாணவிக கள் S.S.Cபரீட்சையில் தோற்றி 16 மாணவிகள் சித்தியடைந்தனர்.
இவ்வாறு படிப்படியான வளர்ச்சியை கல்வியில் அடைந்துள்ள பாத்திமாவில் 1968 ல் கல்விப் பொது தராதர உயர் தரப் பத்திர கலைப்பிரிவு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தானால் அவ்வமயம் கல்வி கற்ற மூவரில் ஒருவர் முதன் முறையாக பல்கலைக்கழகத்தில் கலைபீடத்துக்கு தெரிவாயினர். அதனைத் தொடர்ந்து பல் வைத்தியம், மிருக வைத்தியம், விஞ்ஞானம், கலை, மருத்துவம், சட்டம், முகாமைத்துவம் என பல்வேறுபட்ட துறைகளுக்கும் வருடா வருடம் மாணவர்கள் அனுமதி பெற்றுக் கொண்டு இருப்பது போன்று கல்வியில் கல்லூரிகள், தொழிநுட்பக் கல்லூரிகள் போன்ற இணைந்த பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களின் அனுமதி துரித முன்னேற்றத்தை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடவிதானத் துறையில் (Curriculum)ஏற்பட்ட முன்னேற்றத்தைத் போன்றே இணைப்பாட விதான (Co-Curriculum) செயற்பாடுகளிலும் பாடசாலையின் நற்பெயரை பிரபலயப்படுத்தும் வகையில் பெண்களுக்குரிய விளையாட்டான வலைப்பந்து (Net Ball) விளையாட்டுப் போட்டி மூலம் 27.06.1966 ம் ஆண்டு சென் அன்ரூஸ் மகா வித்தியாலயத்துடன் போட்டியிட்டு தனது வரலாற்று ரீதியான வெற்றியை பாத்திமா மாணவிகள் பெற்றுக் கொண்டனர். முஸ்லிம் மாணவிகள் தங்களின் மார்க்கக் கலாசாரத்துக்கு அமையவே கூடுதலாக வாழக் பழகியதால் ஆண்களைப் போன்று பொது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த போதிலும், பாடசாலை விளையாட்டுக்களில் பெண்களை மட்டும் மத்தியஸ்தர்களாக கொண்டு தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
மேலும் இப் பாடசாலையின் பௌதீக வளங்களை எடுத்து நோக்கும் போது 1921ல் இப் பாடசாலை அரசினர் ஆண்கள் பாடசாலையாக இருந்தபோது 145"×35"அளவைக் கொண்டு நகரத்தின் தனவந்தர்களாலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பணத்தையும் சேர்த்து கல்லூரியின் பிரதான மண்டபம் அமைக்கப்பட்டது.
பிரச்சினைகள் காரணமாக யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு போன்ற பல பகுதிகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வந்தனர் அவர்களது பெண் பிள்ளைகளின் கல்வி வசதிகளுக்காக பாத்திமாவில் மாலைநேர வகுப்புகளைப் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு நடாத்துவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த திருமதி மஜீத் பொறுப்பானார் திடீரென அதிகரித்த மாணவர்களின் தொகைக்கேற்ப அரசாங்கத்தாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாளும் பல கட்டட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அத்தோடு மின்சார வசதி, குடி நீர் வசதி என உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டன.
01. 09.1972. இல் "சியவச" நூல் நிலையம் உலக வங்கி உதவியுடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிபர் அகமடொன் காலத்தில் மூன்று கட்டடங்களும் அதிபர்களான திருமதி ஹாரியா, திரு. அபு'பைதா, திருமதி கரீமா கபு' ர் ஆகியோரின் காலங்களில் தலா ஒரு கட்டடம் வீதம் நிர்மாணிக்கப்பட்டு 25.01.1982 இல் மனைவியற் கூடமும் 28.07.1972 இல் மாணவருக்கானபொது பற்சிகிச்சை நிலையத்துடன் ஒரு கட்டடமும் கட்டிக் கொடுக்கப்பட்டது . அதிபர் எஸ்.எப்.மஜுத் காலத்தில் மாணவர் விடுதியும் , இரட்டை மாடி கட்டடம் ஒன்றும் வழங்கப்பட்டது. 01.06.1986 இல் வடமேல் மாகாண முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றாக கொத்தணிப்பாடசாலையாக உயரத்தப்பட்டது .
1990 ம் ஆண்டு கனணி அலகு(Computer Unit ) நூல் நிலையக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது . இதனால் புதிய நூல் நியலைத்துக்கான தேவை ஏற்பட்டது . 23.08.1999 இல் தேசிய மீலாத் விழா இப்பாடசாலையில் நடாத்தப்பட்டது . அச்சமயம் அதிபராக இருந்த பரீனா நசீரும், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இணைந்து இப் பாடசாலையை ஒரு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான சிபாரிசுகளை அரசுக்கு செய்தனர் . அந்நேரம் இடம் பெயர்ந்த மாணவர்களுக்கென மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் இரட்டை மாடிக் கட்டடம் ஒன்று வழங்கப்பட்டது . வடமேல் மாகாண அமைச்சராக இருந்த ஜனாப் நவவி அவர்களால் பாடசாலைக்கான உள்ளக வீதியும் , தாவரவியல் பூங்காவும் , புதிய நூல் நிலையமும் , நவவி இரட்டை மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதியும் செய்து தரப்பட்டது.
06.01.1997 இல் பாத்திமா கல்லூரியில் ஆரம்ப நெறியிலிருந்து சிங்கள மொழி பிரிவும் 09.08.2002 இல் தரத்திற்கு ஆங்கில மொழி மூலம் கல்விப் போதனைகளும் ஆரம்பிக்கப்பட்டன . " சியவச" நூல் நிலையம் உடைந்து வீழ்ந்தமையால் அவ்விடத்தில் தனவந்தரான ஜனாப் அலி சப்றி அவர்களால் 25 இலட்சம் ரூபா செலவில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் மாணவிகளுக்கான கட்டடம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது . 2003 ஆம் ஆண்டில் வடமேல் மாகாணத்திலேயே முதன் முதலில் விஞ்ஞான தினத்தை சிறப்பாக நடத்தி விஞ்ஞான மலர் ஒன்றையும் வெளியிட்டதாக விஞ்ஞானப் பணிப்பாளரின் விஷேட பாராட்டையும் பெற்றுக் கொண்டது . மேலும் 2006 இல் புதிய நிர்வாக கட்டடத் தொகுதியை புத்தளம் உறுப்பினரும் அமைச்சருமான கே.ஏ.பாயிஸ் அவர்கள் கட்டிக் கொடுத்துள்ளார்.
2007 இல் நவீன விஞ்ஞான ஆய்வு கூடமும் அமைச்சர் ரிஸாத் பதியுதீன் அவர்களால் புதிய இரு மாடிக் கட்டடமும் வழங்கப்பட்டுள்ளன . 2002 இல் நவீன தகவல் தொழில்நுட்ப விருத்திக்காக மேற்கோள்ளப்பட்ட SEMP திட்டத்தின் மூலம் நவீன மயப்படுத்தப்பட்ட Computer Learning Center ம் , பல்லூடக சாதன அறையும் வடமேல் மாகாணத்திலேயே முதன் முதலாக தேசிய பாடசாலையல்லாத ஒரு மகளிர் பாடசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டமை நன்றியடன் கூறத்தக்கதாகும் . மேலும் , பாத்திமா மாணவிகள் கலை நிகழ்ச்சிகளிலும் , தமிழ் மொழித்திறன் ( பேச்சு , விவாதம் , அறிவுக் களஞ்சியம் , கட்டுரை ) போட்டிகளிலும் , ஆங்கிலத்தினம் தினம் ( English Day ) சிங்கள மொழித்திறன் , சுற்றாடல் அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் மாவட்ட , மாகாண , அகில இலங்கை ( தேசிய மட்டம் ) என்ற ரீதியில் சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களையும் சுவீகரித்துள்ளனர்.
முன்னைய அதிபரின் மறைவைத் தொடர்ந்து பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி . ரிஸ்வான் 15.06.2004 இல் கல்லூரியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்வி பெறுபேறுகள் அதிகூடிய மட்டத்தில் உயர்ந்தது . அந்த வகையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 2004 இல் 20 , 2005 இல் 11 , 2006 இல் 13 மாணவிகௗளும் , 2007 இல் 20 மாணவிகளும் சித்தியடைந்து 99 % இற்கு மேற்பட்ட மாணவிகள் 100 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர் .
சிங்கள மொழி மூலமும் 149 புள்ளிகளை ஒரு மாணவி முதன் முறையாக பெற்றுள்ளதுடன் 7 மாணவிகள் 100 இற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர் . அத்துடன் 176 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை ஒரு மாணவி பெற்றுள்ளார் . க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 2004 , 2005 களில் தலா ஒவ்வொரு மாணவியும் , 2006 இல் , இரண்டு மாணவிகளும் 10A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளனர் . அவ்வாறே க.பொ.த. உயர்தர பரீட்சையில் 2006 இல் கலைப் பிரிவிலும் , வர்த்தகப் பிரிவிலும் இரு மாணவிகள் 3A சித்திகளைப் பெற்று பாத்திமாவிற்கு புகழை ஈட்டித் தந்துள்ளனர்.
2007 ஆம் விஞ்ஞான மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் உச்சப் பயனைப் பெறும் நோக்கில் புத்தளம் நகரிலுள்ள விஞ்ஞானம் கற்கும் உயர்தர மாணவ மாணவிகளையும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து புதிய விஞ்ஞான கணித வகுப்புக்கள் பாத்திமாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் புதுமைகள் பல படைத்துள்ளனர் பாத்திமா மாணவிகள் . 2005 இல் 80 நாடுகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் ( சவுதி அரேபியாவில் ) M.Sறிபாஸா என்ற மாணவி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது . 2006 இல் பல ஓவியப் போட்டிகளிலும் பரிசில்களை வென்றுள்ளார் . 2007 இல் உலக குடியிருப்பு தினத்தை ஒட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியில் A.பாத்திமா சஹ்ரா என்ற மாணவி அகில இலங்கையில் முதல் இடத்தைப் பெற்றுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2008.01.31 ஆம் திகதி எமது பாடசாலையிலிருந்து ஆரம்பப் பிரிவு பிரிக்கப்பட்டு பு / செய்னப் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது . தரம் 1-5 ல் கல்வி கற்ற சுமார் 239 மாணவர்கள் அனுப்பப்பட்டதுடன் , 32 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் . இப்பாடசாலை எமது கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இன்று வரை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு முதல் எமது கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு வைபவம் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்குமுகமாக இடம் பெறுகிறது.
2009.08.03 ஆம் திகதி முதல் 2009.08.14 ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற கணனி பயிற்சி பாசறை ஒன்றில் கலந்து கொள்வதற்கான புலமைப் பரிசில் அடிப்படையில் தேசிய ரீதியில் தெரிவாகி , கலந்து கொள்வதற்காக எமது பாடசாலையின் கணனி அறை முகாமையாளரான திருமதி S.B.S. மாஹிறா அவர்கள் பயணமானார்கள்.
2009 ஆம் ஆண்டு அரசினால் ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப போட்டியில் எமது பாடசாலை பங்குகற்றி வெற்றி பெற்றதற்காக 2010 ஆம் ஆண்டில் ரூ .400,000 பெறுமதியான Multimedia projector உட்பட பல கணனி உபகரணங்கள் பரிசில்களாக கிடைக்கப்பெற்றன.
2011.04.24 ஆம் திகதி முதல் 2011.05.19 வரை U.S.A இல் நடை பெற்ற Youth Leadership நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எமது பாடசாலையின் ஆங்கிலப் பாட ஆசிரியை A.N.M.P. ரிஸ்கியா அவர்கள் பயணமானார்கள்.
2011 ஆம் ஆண்டு , 2010 ஆம் ஆண்டில் கா.பொ.த. ( சா.த ) இல் சித்தியடைந்த கணித / விஞ்ஞானப் பிரிவிற்கு தகுதி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் , கால்நடை வள பிரதி அமைச்சராக இருந்த கே.ஏ பாயிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க GUIL மேல் மாகாண முதலமைச்சர் அவர்களின் பணிப்புரையின் பேரில் புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி , பெற்றோர்களின் விருப்பத்திற்கமைய மன்னார் வீதியில் அமைக்கப்பட்ட பு / ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர் . இதன் காரணமாக 1AB தரத்தையுடைய எமது கல்லூரி 1C தரத்தை அடைந்தது.
2012.02.01 அன்றைய தினம் இக்கலாசாலை தனது 50 வருட பூர்த்தியை கொண்டாடியது . இதனையொட்டிய நிகழ்வுகள் 2012.01.31 ஆம் திகதி முதல் 2012.02.04 வரை 3 நாட்களாக மலர் வெளியீடு , கண்காட்சி , கலைவிழா , அறிவுக்களஞ்சியப்போட்டி மற்றும் சுற்று மதில் சுவரில் சித்திரங்கள் , புதிய தலை வாயில் , நினைவுத்தூபி , உள்ளக வீதி , எமது பாடசாலையின் வளைத்தளம் என்பன திரை நீக்கம் செய்யப்பட்டன . இந்நிகழ்வில் வடமேல் மாகான முதலமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , புத்தளம் நகர பிதா உட்பட மற்றும் கல்வி , வரத்தக பிரமுகர்கள் , அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர் . இந்நிகழ்வில் பாத்திமாவின் முதல் அதிபர் திருமதி S.J. அகமடொன் அவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலை " ஆயிரம் இடைநிலைப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் " கீழ் உள்வாங்கப்பட்டது . இதனடிப்படையில் 4 அறைகளுக்கு உரிய உபகரணங்களுடன் கூடிய மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் ஒன்றும் நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறை ஒன்றும் வழங்கப்பட்டன.
2015.04.26 ஆம் திகதி 10 வருடங்களுக்கு மேலாக அதிபராக கடமையாற்றிய திருமதி சுமையா ரிஸ்வான் அவர்கள் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.
2015 ஆம் ஆண்டில் பிரதான உள்ளக வீதி மேலும் விஸ்தரிக்கப்பட்டதுடன் புதிய கொன்கிரீட் பாதையும் அமைக்கப்பட்டது.
1962 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திமா வடமேல் மாகாணத்தின் ஒரேயொரு மும்மொழிமூல முஸ்லிம் மகளிர் பாடசாலையாக , பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது . தன் மடியில் தவண்ட அன்புக் குழந்தைகள் இன்று வைத்தியர்களாகவும் , சட்டத்தரணிகளாகவும் , கணக்காளர்களாகவும் , பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்களாகவும் மட்டுமன்றி பல்வேறு துறைகளிளும் இருந்து நாட்டுக்கு சேவை புரிந்து வருவதைக் கண்டு உள்ளம் பூரிக்கின்றது . தற்போது 2000 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் கொண்டியங்கும் இப்பாத்திமாவின் வளர்ச்சிப் பாதையில் துணை நின்ற தூண்களாக அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் , கல்வி நிர்வாகிகள் , கல்விப் பணிமனை , கல்வி சாரா ஊழியர்கள் , நலன் விரும்பிகள் , வர்த்தகர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் தளராத உறுதியுடனும் மென்மேலும் உயர்வதற்கு வல்லோனின் அருள் என்றும் கிடைக்கட்டுமாக.
S.B.S ஹிரா அவர்கள் பாடசாலையின் அதிபர் பொறுப்பினை ஏற்று நடாத்தினார்கள் இவர்களது காலத்தில் பாடசாலை சுற்றுப்புச் சூழல் முறையாக பராபாரிக்கப்பட்டு கூடிய கவனம் செலுத்தப்பட்டது அதே காலப்பகுதியில் 2015/2016 ஆண்டில் சொகுசு மலசலக்கூட நிர்மாணிப்பு பணிகள் இடம்பெற்றது . அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலை மயில் மாபெரும் வருடந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
2016.01.27 ம் திகதி புதிய அதிபராக M.S.S. ரஜியா அவர்கள் அதிபர் தரம் பெற்ற அதிபராக நியமனம் பெற்றார்கள்.
குழாய்க்கணறு மூலம் மாணவர்களுக்கு நீர் விநியோகிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது . அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் புதிய பல் சிகச்சை நிலையத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் கூட்டுறவு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் . 2017 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்திட்ல்புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு M.H.M நவவி அவர்களின் நிதி ஒதுகாட்டில் பாடசாலைக்கு , CCTV Camera 16 வும் தெரு விளக்குகள் 12 வும் ,Projectors & Screen , Opaen Class room என்பவற்றினை கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது . பாடசாலையின் 2015, 2016 ஆண்டுக்கான பரிசளிப்பு வைபவம் 16.05.2017 கல்வி இராஜாங்க அமைச்சர் திரு ராதா கிருஸ்னன் தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் மாகாண சபை உறப்பினர்கள் திரு தாஹிர் திரு நியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் . எமது பாடசாலைக்கு Silent volunteer நிறுவனத்தினால் மடிக்கணினி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு வைபவம் பெப்ரவரி மாதம் பகுதி வாரியாக இடம் பெற்றது . பாடசாலையின் குழாய் நீர் விநியோகத்தினை சீர்படுத்தும் பணி பக்ஸா நிறுவனத்தினால் அமைத்துத் தரப்பட்டது . 2018 .12.31 ஆம் திகதி டாடசாலையின் காரியாலய மேல் மாடியில் 6 ஆம் தர மாணவர் அனுமதி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு , தீரவினை பெறுமுகமாக , வலயக்கல்விப்பணிப்பாளர் திரு விஜயசிங்க தலைமையில் புத்தள நகர சபை தலைவர் K.A.B பாயிஸ்உட்பட உறுப்பினர்கள் கோட்ட கல்விப்பணிப்பாளர் திருமதி அஸ்கா , திட்டமிடல் பணிப்பாளர் M.I.M அலிஜின்னா உதவிக்கல்விப்பணிப்பாள திரு கமலேந்திரன் எமது பாடசாலையின் முகாமைத்துவக்குழு SDEC , ஸைனப் ஆரம்ப பாடசாலையின் அதிபர் உட்பட SDEC உறுப்பினர்கள் , கலந்துக்கொண்ட கூட்டம் இடம்பெற்றது பல்வேறு கருத்துபரிமாற்றத்தின் பின் வகுப்பறை பிரச்சினைக்கு தீர்வாக ஸைனப் ஆரம்ப பாடசாலை பயன்படுத்தி வந்த பாத்திமா பாடசாலைக்கு சொந்தமான மாணவர் விடுதிக்கட்டடத்திலிருந்து 2 வகுப்பறை பகுதியை திருப்பிப் பெற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு 2019 ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தரம் 6 தொடக்கம் மேலதிகமாக 2 வகுப்பறைகள் ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
2019 ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் ஒலிபெருக்கி இயந்திரத்தொகுதி வழங்கப்பட்டது.